10/26/2015

காத்திருப்பு

விடுமுறை  வாரங்களின் 
சொற்ப மணிநேரங்களை
கையகப்படுத்தும் சந்திப்புகளின்
தொகுப்பாகத்தான்
நமது தாம்பத்திய வாழ்க்கை ..
 
வெளிநாட்டுப் பணத்திற்காக
பணயம் வைக்கப்பட்டு
காலவதியாகும் முன்
மீட்கப்பட துடித்தபடி இளமை....

ஏக்கங்களும் தவிப்புகளும்
இடைவிடாத அலைகளாய்
முட்டிக்கொள்ளும் கடலாக மனம்..

 அலைபேசி அழைப்புகளில்
எல்லாம் உன் குரலாகவே  ஒலிக்கிறது..
நம் செல்ல சீண்டல்கள் சிணுங்கல்கள்
 

 ஊடல் கூடல் அத்தனையும் ரகசியமாக
ரசிக்கத் தொடங்கிவிட்டது இந்த அலைபேசி...

ஒவ்வொரு பிரிவின் போதும்
 உடையும் 

என் இதயத்தை யாரும்
பார்க்க அனுமதிக்காமல்
எச்சரிக்கையாய் இருப்பதில்

வலிகளை விழுங்கக் கற்றுக்கொள்கிறேன்..
என் பார்வை வட்டம் விட்டு   நீ மறைந்த
அந்த நொடி தொடங்கிவிடுகிறது
அடுத்த சந்திப்பிற்கான
என் காத்திருப்பு..

6/02/2011

பந்தயக் குதிரை

 சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய, 'முத்தமிழ் விழா 2011' கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கவிதை இது


    

அதிகாலை கடிகார அலறலோடு
ஆரம்பிக்கின்றன நாட்கள்..
பள்ளி நேரமும்  சிறப்பு வகுப்புகளுமாக
பலமணிநேரங்கள் பள்ளிக்கூடத்தில்.....


 தவிரவும்  துணைப்பாட வகுப்புகள்
அம்மாவின் கனவுக்காக பாட்டு,நடன வகுப்புகள்
அப்பாவின் ஆசைக்காக கராத்தே,நீச்சல் வகுப்புகள்
வீட்டில் கூட அட்டவணைப்படி  பயிற்சிகள்
அனைத்திலும் முதன்மையாக இருக்க
வேண்டியது மட்டுமே குறிக்கோளாக.....


சமூக மன்றங்களும் சில அமைப்புகளும்
குழந்தைகளின் குதூகலத்திற்கும்
நல்ல அனுபவம் பெறவும் நடத்தும்
போட்டிகள் அனைத்திலும் சேர்க்கப்பட்டு
வென்றாக வேண்டிய கட்டாயத்தில்......


இலக்கு எதுவென்ற அறிதல் கூட இல்லாமல்
பெற்றோரின் இலட்சியங்களையும் கனவுகளையும்
தன் முதுகில் சுமந்து ஓடும் பந்தயக் குதிரையாக...
இளைப்பாறல் கூட அடுத்த ஓட்டத்திற்கான
பயிற்சியாக ஆகிவிட்ட பரிதாபம் !!


ஓய்வு பெற்று வீட்டிலிருக்கும் தாத்தாவைப் பார்த்து
‘நான் எப்போது ஓய்வு பெறுவேன்?’
என் ஏக்கதுடன் கேட்கிறான்..
வாழ்வின் தொடக்கநிலையில் இருக்கும்
’சிறுவன்’ எனும் தன் அழிந்துபோன
அடையாளத்தை மீட்கத் துடிக்கும்
’மாணவன்’ என்றே எப்போதும்
அடையாளம் காணப்படும் சிறியவன்...

5/08/2011

தாய்மை
எந்த உறவுக்குமில்லாத
மதிப்பை அன்னைக்கு அளித்து
அதன் பெருமைகள் முடிவில்லா 
பட்டியலாக நீண்டு கொண்டே போய்
மனதில் அசைக்க முடியாத இடத்தைப் 
பெற்றிருக்கிறது இந்த தாய்மை 

பெண் முழுமையடைவது
தாயாகும்போது தான் என்பார்கள்
இயற்கையின் இயல்பான
நிகழ்வான தாய்மையடைவதே
பெருமை என்ற போது 
தாய்மை முழுமையடைவது எப்போது?????


நான் பெற்றவள் என்ற
உரிமை நிலைநாட்டலாய் இல்லாமல்
சுயநலக் கலப்பின்றி 
கருத்து பரிமாறும் சகோதரியாக 
கைகோர்க்கும் போது....

என் அடையாளம் நீ என்ற
அலட்டல் இல்லாமல்
வாழ்வியல் நெறிகளை
வலிக்காமல் திணிக்கத்
தெரிந்த குருவாக 
வழிநடத்தும் போது....

அன்பென்ற பெயரில் நிகழும்
ஆக்கிரமிப்பாக இல்லாமல்
ஆத்மார்த்தமான நட்பாக பிள்ளைகள் மனதில்
அன்னையின் பிம்பம் மலரும்போது மட்டுமே 
முழுமையடைகிறது தாய்மை !!!------நன்றி சிங்கப்பூர் தமிழ்முரசு !!


                        அன்னையர் தின வாழ்த்துக்கள்  !!!
                    

2/07/2011

சிங்கப்பூர் தமிழ்முரசுக்கு நன்றி !!

சிங்கப்பூர் தமிழ்முரசு பத்திரிக்கையின் ஞாயிறு மலரில் எனது கவிதை வெளியாகி இருக்கிறது...தமிழ்முரசுக்கு என் நன்றி !!

இதோ கவிதை .......
11/20/2010

பிறந்த நாள் வாழ்த்துக்கள்வலையுலக நண்பர்களே !! அனைவருக்கும் வணக்கம்...நீண்ட இடைவேளைக்கு காரணம், 2 மாத விடுமுறைக்கு இந்தியா வந்துள்ளேன்..இன்று என் செல்ல மகள் ஷ்ரேயா பிறந்த நாள்.இரண்டாம் வகுப்பில் படிக்கிறாள்.அவர்கள் பள்ளியில் மாணவர்களின் கவிதை மற்றும் கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிடுவார்கள்..அதற்காக அவள் எழுதிய கவிதை(தெரியாத வார்த்தைகள் மட்டும் சொல்லிக் கொடுத்தேன்). அவள் பிறந்த நாளான இன்று அதை உங்களிடம் சேர்ப்பதில் மகிழ்ச்சி.


                         என் பிறந்த நாள்


வருடத்திற்கு ஒரு நாள்
எனக்குப் பிடித்த நன்னாள்

புத்தாடை உடுத்தி பெற்றோர் ஆசி வாங்குவேன்
கோவிலுக்குச் சென்று கடவுளை வணங்குவேன்

நண்பர்களோடு சேர்ந்து 
நல்லதொரு விருந்து
களைக்கும் வரை ஆட்டம்
ஆஹா என்ன கொண்டாட்டம்

பரிசுகளோ ஏராளம்
நண்பர்கள் தந்த பொம்மைகள்
தாத்தா தந்த புத்தகம்
பாட்டி தந்த பேனா
மாமா தந்த மிதிவண்டி
அம்மா அப்பா தந்த கைக்கடிகாரம்

என் மனம் கவர்ந்த பரிசு எது?
அல்வா போன்ற பரிசு அது !
அன்பால் தந்த பரிசு அது !
என் அன்புத் தங்கை தந்த முத்தம்  அது !!!
விலைமதிப்பற்ற பரிசு அது 
இதுபோல் வேறு கிடைத்திடுமா????